சிட்னி விமான நிலையத்தில் Omicron தொற்றுடன் இருவர்: சுகாதாரத்துறை உறுதி
தென்னாபிரிக்காவில் இருந்து சிட்னி திரும்பியவர்களில் இருவருக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான Omicron தொடர்பில் அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தென்னாபிரிக்காவில் இருந்து நேரடி விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், நவம்பர் 27ம் திகதி சனிக்கிழமை தென்னாபிரிக்காவில் இருந்து சிட்னி திரும்பிய இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இருவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும், தற்போது சிறப்பு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரின் தோஹா நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு சிட்னியில் தரையிறங்கிய விமான பயணிகளில் அடையாளம் காணப்பட்ட 14 பேர்களில் இவர்கள் இருவரும் இருந்துள்ளனர்.
எஞ்சிய 12 பயணிகளும் தென்னாபிரிக்க நாட்டவர்கள் எனவும், அவர்கள் தற்போது 14 நாட்கள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 260 பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தென்னாபிரிக்கா, லெசோதோ, பொஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா, எஸ்வதினி, மலாவி மற்றும் சீஷெல்ஸ் ஆகிய ஒன்பது ஆபிரிக்க நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா திரும்பும் எவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஞ்சிய நாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளும் தங்கள் வசிப்பிடங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.