பிரித்தானியாவில் அதிகரிக்கும் Omicron தொற்று... லண்டன் தொடர்பில் முக்கிய தகவல்
பிரித்தானியாவில் Omicron மாறுபாடு பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், லண்டன் நகரம் பாதிப்பில் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று உலக நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், டெல்டா மாறுபாடைவிட ஓமிக்ரான் பிரித்தானியாவில் அதிகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் லண்டனில் உறுதி செய்யப்படும் கொரோனா தொற்றாளர்களில் மூன்றில் ஒருபகுதியினரில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வெளிவரும் தகவல்கள் கவலை கொள்ளும் வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்கள், எதிர்வரும் நாட்கள் சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய சூழலில் லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்தில் அதிக பரவல் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 9ம் திகதிக்கு பின்னர் ஒட்டுமொத்த பிரித்தானியாவில் நேற்று மட்டும் அதிக எண்ணிக்கையிலான தொற்று பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்கள்,
ஓமிக்ரான் மாறுபாடு இங்கிலாந்தில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது, மேலும் ஸ்கொட்லாந்தில் இன்னும் வேகமாகவும் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, லண்டனில் பதிவாகியுள்ள தொற்றாளர்களில் 30% பேர்களுக்கு ஓமிக்ரான் மாறுபாடு என்பதை உறுதி செய்துள்ள அமைச்சர்கள், பிரித்தானியாவில் ஓமிக்ரான் பாதிப்பானது ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் அடையாளம் காணப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லண்டனில் 100,000 பேர்களில் 474.7 பேர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது, இதுவரையான உச்ச எண்ணிக்கை என குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை ஓமிக்ரான் தொற்றால் மருத்துவமனைகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அல்லது இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரையில் பாதிப்பு அச்சுறுத்தல் அதிகந்தான் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், வெள்ளிக்கிழமை மட்டும் பிரித்தானியாவில் 58,194 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 448 பேர்களுக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானியாவில் இதுவரை ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிரித்தானியாவில் ஓமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 90 என்பது குறிப்பிடத்தக்கது.