சுவிட்சர்லாந்திலும் பரவியது ஒமைக்ரான்!
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திலும் ஒமைக்ரான் கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான ஜேமனி, இத்தாலி என, மேலும் பல நாடுகளுக்கு, ஒமைக்ரான் எனப்படும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது.
ஒமைக்ரான் நாட்டிற்குள் நுழையாமல் தடுக்க உலக நாடுகள், குறிப்பாக தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நபருக்கு ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்பு இருப்பதாக சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் பரிசோதனைகள் நிலைமையை தெளிவுபடுத்தும் என் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, 19 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு பயணிக்க விமானங்களில் ஏறும்போது கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனையை வழங்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, சுவிஸ் வந்தவுடன் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரித்தானியா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் அடங்கும்.