உச்சத்தை எட்டியுள்ள ஓமிக்ரான் மாறுபாடு: சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தற்போது ஓமிக்ரான் மாறுபாடு உச்சம் தொட்டுள்ளது என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் நாளுக்கு 100,000 பேர்களுக்கு கொரோனா சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான பாதிப்புகள் அடையாளம் காணப்படாதபோதும், சமீபத்திய நாட்களில் பாதிப்புகள் அதிகரித்தே காணப்படுவதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தீவிர சிகிச்சையை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, சுவிட்சர்லாந்திலும் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் கண்காணித்து வருவதாகவே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னர் ஏற்படும் நீண்ட கால பக்கவிளைவுகள் தொடர்பில் தேசிய அளவில் பதிவு செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதே கோரிக்கையை முன்னர் சுகாதாரத்துறை நிராகரித்திருந்தது. தற்போது அந்த முடிவை கைவிட்டு தேசிய அளவில் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளதை மாநில நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன.
சுமார் 25% கொரோனா நோயாளிகள் நீண்ட கால பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 3% பேர்கள் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
சூரிச் பலகலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.