கனடாவில் இருந்து தான் எங்கள் நாட்டுக்குள் ஓமைக்ரான் பரவியது! சீனா தகவல்
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் மாறுபாடு உலகின் பல நாடுகளுக்கும் அதிவேகமாக பரவி பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சீனாவிலும் புதிதாக 127 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, தலைநகர் பீஜிங்கில் ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட முதல் நபர் கனடா நாட்டில் இருந்து வந்த பார்சல் ஒன்றை பிரித்து பார்த்ததாகவும் அதன் மூலம் அவர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பார்சல் கனடாவில் இருந்து அமெரிக்கா, ஹாங்காங் வழியாக சீனாவுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கனடாவில் இருந்து சீனாவிற்கு ஒமைக்ரான் நுழைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் தபால் பார்சல்களில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பார்சல்களை கையாளும் அஞ்சல் ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் பொதுமக்களுக்கும் முக கவசம் மற்றும் கைஉறைகளை போட்டுக் கொண்ட பின்னரே தங்களுக்கு வரும் வெளிநாட்டு பார்சல்களை பிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் அந்நாட்டின் பல நகரங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.