உலகின் 6வது பணக்காரராக அறியப்பட்ட நபர்... ரூ 40,000 கோடி கடனாளியான கதை: யார் அவர்
ஒரு காலத்தில் உலகின் 6வது கோடீஸ்வரராக அறியப்பட்ட நபர், கடனாளியாகி பின்னர் சட்டத்தரணிகளுக்கான ஊதியத்திற்கு மனைவியின் நகைகளை விற்கும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
தொலைநோக்கு இல்லாத செயற்பாடுகள்
அவரது அந்த மோசமான நிலைக்கு காரணம் தொழில் தெரிவுகளில் ஏற்பட்ட சறுக்கல் மற்றும் தொலைநோக்கு இல்லாத செயற்பாடுகள் என்றே கூறுகின்றனர். சுமார் 42 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது கோடீஸ்வரராக அறியப்பட்ட அந்த நபர் வேறுயாருமல்ல, அனில் அம்பானி தான்.
ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர், அனில் அம்பானி உலகின் 6வது கோடீஸ்வரராக அறியப்பட்டார். ஆனால் அதே வேகத்தில் பெரும் சரிவையும் எதிர்கொண்டார்.
மறுபுறம் அவரது சகோதரர் முகேஷ் அம்பானி தொட்டதெல்லாம் துலங்கியது. தற்போது உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வருகிறார். அனில் அம்பானியின் செயற்பாடுகளே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
சரியான திட்டமிடலோ, தொலைநோக்கு பார்வையோ இல்லாமல், ஒரே நேரத்தில் பல நிறுவனங்களைத் தொடங்கினார். தொலைத்தொடர்பு, மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் ஒரே நேரத்தில் கால்பதிக்க முயன்று, மிக மோசமாக தோல்வி கண்டார்.
இதனால் கடனாளியானார். அனில் அம்பானியின் நிறுவனங்களின் மீதான கடன் அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் அவசரத்தில் தொடங்கிய நிறுவனங்களை ஒன்றன் பின் ஒன்றாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மொத்த கடன் ரூ 40,000 கோடி
தவறான முடிவுகளால் RCom என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் கடும் இழப்பை எதிர்கொண்டது. ஒருகட்டத்தில் ரூ 25,000 கோடி கடனை எட்டியது. சீன வங்கிகளில் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் கடன் வாங்கினார், ஆனால் அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான அனில் அம்பானி, மூன்று வங்கிகளுக்கு சுமார் ரூ.5446 கோடியை திருப்பி செலுத்துமாறு நீதிமன்றம் கூறியது. தன்னிடம் பணம் இல்லை என்று நீதிமன்றத்தின் முன் திவாலானதாக அறிவித்தார் அனில் அம்பானி.
அப்போது அவரது மொத்த கடன் என்பது ரூ 40,000 கோடி. சட்டத்தரணிகளுக்கு ஊதியம் வழங்க மனைவியின் நகைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது மெல்ல மீண்டுவரத் தொடங்கியிருக்கும் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 250 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
மும்பை மாநகரில் 17 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்றும் அவருக்கு சொந்தமாக உள்ளது. மூன்று வங்கிகளுக்கான கடன்களை சமீபத்தில் அவர் அடைத்துள்ளார். அத்துடன் இன்னொரு ரூ 1023 கோடி கடனையும் அனில் அம்பானி திருப்பிச் செலுத்தியுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |