பிரான்சில் மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே காரை மோதிய நபர்: ஒருவர் பலி ஐந்து பேர் காயம்
பிரெஞ்சு நகரமொன்றில், மக்கள் கூட்டத்தின்மீது ஒரு இளைஞர் வேண்டுமென்றே காரை மோதியதில் ஒருவர் பலியானார், ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே காரை மோதிய நபர்
இன்று அதிகாலை 4.00 மணியளவில், வடக்கு பிரான்சிலுள்ள நார்மன்டி பகுதியில் அமைந்திருக்கும் Evreux நகரில், மதுபான விடுதி ஒன்றின் முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கார் மோதியதில், 30 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். முறையே 31 மற்றும் 52 வயதுடைய இருவர் படுகாயமடை ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், முறையே 34 மற்றும் 58 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 50 வயது பெண்ணொருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
மதுபான விடுதி ஒன்றில் ஒரு இளைஞருக்கும் ஒரு குழுவைச் சேர்ந்த சிலருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அவர்களை பவுன்சர்கள் வெளியேற்றியதுடன், மதுபான விடுதியின் உரிமையாளர் விடுதியை மூடவும் முடிவு செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மக்கள் கூட்டமாக வெளியேறியுள்ளார்கள். அப்போது சண்டையிட்டவர்களில் ஒரு நபர், தனது காரை எடுத்துக்கொண்டுவந்து வேகமாக அங்கு நின்ற மக்கள் மீது மோதியுள்ளார்.
இந்த சண்டை தொடர்பாக ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |