சுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு குடும்பம் வறுமையில் வாடுகிறது... அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?: வெளியான ஆய்வு முடிவுகள்
வெளியே இருந்து பார்க்கும்போது செல்வச்செழிப்புள்ள நாடாகத் தெரியும் சுவிட்சர்லாந்தில், ஐந்து குடும்பங்களில் ஒன்று வறுமையில் வாடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நேற்று பெடரல் சமூகக் காப்பீடு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுவிட்சர்லாந்தில் வாழும் குடும்பங்களில் ஐந்தில் ஒன்று மிகக் குறைந்த வருவாயில் வாழ்க்கை நடத்தும் நிலையிலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், வேலையிலிருப்போரின் குடும்பங்களில் 15 சதவிகிதமும், ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்களில் 22 சதவிகிதமும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2011க்கும் 2015க்கும் இடையில், 4.5 மில்லியன் மக்களின் வரி செலுத்தும் தகவல்களின் அடிப்படையில் ஜெனீவா பல்கலை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கடினமான நிலை பல குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு நீடித்த நிலையில், இரண்டு குடும்பங்களில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின் நிதி நிலைமையில் நிலைத்தன்மை அடைந்துள்ளது.
2003க்கும் 2015க்கும் இடையில் பொதுவாக ஊதியம் உயர்ந்துள்ளது என்றாலும், ஓய்வு பெற்ற தனி ஆண்கள் அதனால் பயன்பெறவில்லை.
குறிப்பாக, சிறுபிள்ளைகள் உடைய, கணவன் அல்லது மனைவியை பிரிந்து தனியாக வாழும் நபர்கள், வயது முதிர்ந்த புலம்பெயர்ந்தோர் ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வறுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.