சுவிட்சர்லாந்தில் ஒரு இரவு முழுவதும் சகதியில் சிக்கித் தவித்த முதியவர்
சுவிட்சர்லாந்தின் Schaffhausen மாநிலத்தில் 80 வயதான நபர் வாகன விபத்தில் சிக்கி, ஒரு இரவு முழுவதும் சகதியில் தத்தளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Schaffhausen மாநிலத்தில் Stein am Rhein நகரிலேயே திங்கட்கிழமை சுமார் 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 80 வயதான இந்த நபரின் வாகனம் சகதியில் சிக்கிக்கொள்ளவே, வாகனத்தில் இருந்து வெளியே வந்தவர், துரதிர்ஷ்டவசமாக சகதிக்குழியில் விழுந்துள்ளார்.
உதவிக்கு ஆளின்றி போராடிய அவர், அடுத்த நாள் பகல் சுமார் 8.30 மணி வரை அங்கேயே கிடந்துள்ளார். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல, தமது நாயுடன் நடக்க சென்ற ஒருவர், வாகனம் ஒன்று சகதியில் சிக்கியிருப்பதை தூரத்தில் இருந்து கண்டுள்ளார்.
தனது நாயுடன் அந்த வாகனத்தை நெருங்கி வந்தவர், திடீரென்று நாய் குரைக்கும் பக்கம் கவனிக்க, அங்கே விபத்தில் சிக்கிய நபரை பார்த்துள்ளார்.
இதனையடுத்து, நாயுடன் வந்த அந்த நபர் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளிக்கவும், தகவல் அறிந்து விரைந்து வந்த குழுவினர், அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர்.
தற்போது, அந்த நபர் விபத்தில் சிக்கிய விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.