பிரித்தானியாவில் Omicron மாறுபாட்டால் முதல் மரணம்! உறுதிப்படுத்திய பிரதமர்
பிரித்தானியாவில் Omicron மாறுபாட்டால் குறைந்தது ஒருவர் இறந்துள்ளார் என பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, பிரித்தானியாவில் ஒமிக்ரான் பாதிப்பால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், மரணம் குறித்து தனக்கு தெரியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில், மேற்கு லண்டனில் உள்ள பாடிங்டனில் உள்ள தடுப்பூசி கிளினிக்கிற்குச் சென்ற போரிஸ் ஜான்சன், ஒமிக்ரான் தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக, ஒமிக்ரான் தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
துரதிஷ்டவசமாக, ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு குறைந்தது ஒரு நோயாளி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
ஒமிக்ரான் தொற்று லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மக்கள் மத்தியில் அது பரவும் வேகத்தை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
எனவே நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொள்வது தான் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் மாறுபாடு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தரவுகள் பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும், அதன் மிக வேகமாக பரவும் தன்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.