குற்றம் சாட்டப்படாவிட்டாலும் சிறையிலடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர்: கனடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் பயங்கர அனுபவம்...
கனேடிய மாகாணங்கள் பலவற்றில், குற்றம் சாட்டப்படாத நிலைமையிலும், புலம்பெயர்ந்தோர், மாகாண சிறைகளில் அடைக்கப்படும் ஒரு நிலை உள்ளது.
கனடாவில் புலம்பெயர்ந்தோரை காவலில் அடைக்கும் நடைமுறையை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிறார்கள் தொண்டு நிறுவனத்தினர்.
கனேடிய மாகாணங்கள் பலவற்றில் புலம்பெயர்ந்தோர் மாகாண சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் குற்றம் சாட்டப்படாத நிலையிலும்கூட!
கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தங்களின் கீழ், இப்படி பல கனேடிய மாகாணங்கள் புலம்பெயர்ந்தோரை சிறையிலடைக்கின்றன, இது சர்வதேச விதியை மீறும் ஒரு செயலாகும்.
புலம்பெயர்ந்தோர் ஒருவர், மொன்றியலிலுள்ள மாகாண சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் பலமுறை தன்னை நிர்வாணமாக்கி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
Radio-Canada
இத்தனைக்கும் வெளிநாட்டவரான அந்த நபர் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. அவர் கடந்த ஆண்டு, சுமார் ஆறு மாதங்கள் சிறையில் செலவிட்டுள்ளார்.
2015 முதல் 2020 வரை, 8,000 புலம்பெயர்ந்தோரில் சுமார் 2,000 பேரை ஆண்டுதோறும் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி மாகாண சிறைகளுக்கு அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட இந்த புலம்பெயர்ந்தோரில், புகலிடக்கோரிக்கையாளர்களும் அடங்குவார்கள்.
சமீபத்தில், பிரிட்டிஷ் கொலம்பியாவும், நோவா ஸ்கோஷியாவும், கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன.
Olivier Plante/Radio-Canada
ஆனாலும், ஒன்ராறியோ, கியூபெக், நியூ ப்ரன்ஸ்விக், ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan ஆகிய மாகாணங்கள் இன்னமும் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தத்தை தொடர்கின்றன.
செய்தியின் துவக்கத்தில், தன்னை பல முறை நிர்வாணமாக்கி சோதனை செய்ததாக தெரிவித்த அந்த புலம்பெயர்ந்தோர், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்.
அவரை சமீபத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்தபோது, தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தனது மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் அவர்.
Olivier Plante/Radio-Canada
ஒரு சிறிய தனி அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கழிப்பறை கூட கிடையாதாம். தரையில் இருக்கும் ஒரு சிறிய துவாரத்தில்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்கவேண்டுமாம் அவர். அதை தாங்க இயலாமல் பல வாரங்களாக சாப்பிடாமல் இருந்த அவர், விடுவிக்கப்படும்போது எலும்பும் தோலுமாக சாகும் நிலையில் இருந்தார் என்கிறார் அவரது சட்டத்தரணி.
இப்படிப்பட்ட கொடுமைகளை புலம்பெயர்ந்தோர் அனுபவிக்க வழிவகை செய்யும் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியுடனான ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்கிறார் Amnesty International என்னும் தொண்டு நிறுவனத்தின் கனேடிய பிரிவு எக்சிகியூட்டிவ் இயக்குநரான France-Isabelle Langlois.
அவரது கருத்தை ஆதரிக்கும் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனத்தார் மற்றும் சட்டத்தரணிகள், புலம்பெயர்ந்தோரை காவலில் அடைக்கும் நடைமுறையையே மொத்தத்தில் ஒழித்துக்கட்டவேண்டும் என்கிறார்கள்.