இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்... எச்சரிக்கும் கனேடிய மாகாண முதல்வர்
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் எனவும், அவசர நிலை பிரகடம் தேவை இல்லை எனவும் ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி கட்டாயம் என்ற பெடரல் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக லொறி சாரதிகள் நாடு முழுவதும் பல மாகாணங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், நகர நிர்வாகத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் படிப்படியாக வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் நோக்கில் ஒன்ராறியோவில் மாகாண நிர்வாகத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க தாங்கள் தயாரில்லை எனவும், தங்களிடம் வலிமையான சட்ட விதிகள் அமுலில் இருப்பதாகவும் ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று இது தொடர்பில் விளக்கமளித்துள்ள முதல்வர் Jason Kenney, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் மாகாணத்தில் ஏற்கனவே உள்ளன என்றார்.
ஏற்கனவே ஒன்ராறியோவை விட வலுவான சட்டங்கள் உள்ளன. இதுபோன்ற சூழலில் பொலிசாருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்டங்கள் கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்பது மட்டுமின்றி சிறைத்தண்டனை அளிக்கும் அதிகாரம் உட்பட காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மாகாணத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என முதல்வர் Jason Kenney எச்சரிக்கை விடுத்துள்ளார்.