ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை - அமைச்சர் அறிவிப்பு
onions to sell at ration shop for rs35 per kg from 3 september: ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

தற்போது வெங்காய விலை கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை சமாளிக்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், "ஜூலை 6ஆம் தேதி, 6.7.2026 அன்று நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலை விவரங்கள் தினந்தோறும், வாரா வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலையேற்றத்தால், போக்குவரத்து செலவுகள் உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலையின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு விலை ரூ.56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், அரசு தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டுமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்துள்ளது.
நகரப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் அமுதம் அங்காடிகள் மற்றும் நகரப்புற பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக ஒரு கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
3 செப்டம்பர் 2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் வீதம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |