நேர்நிகர் வகுப்புகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்: மாற்று திட்டம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என கோரிக்கை
வவுனியா பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் நேர்நிகர் (ZOOM) செயலிகள் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தொடர்ச்சியாக மாணவர்கள் 2 தொடக்கம் 3 மணி நேரமாக கைத்தொலைபேசிகளுக்கு முன்பாகவும், கணனிகளுக்கு முன்பாகவும் கடும் ஒளிக்கு முன்பாக பார்வையை செலுத்துவதனால் மாணவர்களுக்கு பார்வை தொடர்பான பிரச்சினை ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கற்கும்போது கைத்தொலைபேசி மற்றும் கணனிகளுக்கு நீண்ட நேரம் மின்கலங்களில் (பற்றரிகள்) மின்னை சேமித்து வைத்திருக்காத காரணத்தினால் மின் இணைப்பை வழங்கிவாறே ஒலிவாங்கியாக காதுகளுக்கு மாட்டப்படும் கருவிகளை (HANDS FREE) பொருத்துவதால் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகும் நிலையும் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலையில் 40 நிமிடங்களே ஒரு பாடவேளையாக உள்ளபோதிலும் நேர்நிகர் வகுப்புகளில் தொடர்ச்சியாக இரண்டு மணிநேரமாக கற்பிப்பதனாலும் மாணவர்களில் கிரகிக்கும் தன்மை அற்றுப் போகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் இவ்வாறான கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கல்வியலாளர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கற்கும்போது அவர்களுக்கு ஒரே நேரத்தில் கற்றல் செயற்பாடுகள் நேர்நிகர் செயலியூடாக இடம்பெறுமாயின் தனித்தனியாக கைத்தொலைபேசிகள் அல்லது கணனிகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் வறிய குடும்ப மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாணவர்கள் மற்றும் அக்குடும்பங்கள் பாதிக்கப்படாத வகையில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க பயிற்சி செயற்பாடுகளில் ஆசிரியர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.