வீட்டில் இருந்துக் கொண்டே இனி passport எடுக்கலாம்; இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி
இலங்கையில் கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமாகும்?
இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே ஆன்லைன் கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, 'பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்ட தகவலைச் சரிபார்த்து, விண்ணப்பதாரர்கள் தேவையான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் 51 பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்கள் பதிவு திணைக்களத்தின் உப அலுவலகங்களில் கைரேகை அடையாளங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை, பொத்துவில்
- அனுராதபுரம் மாவட்டம் - நுவரகம் பலத்த மத்திய, கெக்கிராவ, ஹொரவ்பொத்தானை
- பதுளை மாவட்டம் - மஹியங்கனை, ஹப்புத்தளை
- மட்டக்களப்பு மாவட்டம் – வாழச்சேனை, காத்தான்குடி
- கொழும்பு மாவட்டம் - சீதாவக, ஹோமாகம
- காலி மாவட்டம் – கரந்தெனிய, அக்மீமன, நெலுவ
- கம்பஹா மாவட்டம் - நீர்கொழும்பு, மீரிகம, கம்பஹா
- ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை, திஸ்ஸமஹாராம
- யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி, பருத்தித்துறை
- களுத்துறை மாவட்டம் – இங்கிரிய, மத்துகம, பாணந்துறை
- கண்டி மாவட்டம் - கம்பளை, குண்டசாலை, புஜாபிட்டிய
- கேகாலை மாவட்டம் - கலிகமுவ, ருவன்வெல்ல
- கிளிநொச்சி மாவட்டம் – கரைச்சி
- குருநாகல் மாவட்டம் – குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண அலுவலகம்.
- மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு
- மாத்தளை மாவட்டம் - நாவுல
- மாத்தறை மாவட்டம் - அத்துரலிய, தெவிநுவர
- மொனராகலை மாவட்டம் – புத்தல
- முல்லைத்தீவு மாவட்டம் – முல்லைத்தீவு
- நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, வலப்பனை
- பொலன்னறுவை மாவட்டம் – எலெஹெர, திம்புலாகல, ஹிங்குராக்கொட
- புத்தளம் மாவட்டம் – புத்தளம், சிலாபம்
- இரத்தினபுரி மாவட்டம் – பலாங்கொட, குருவிட்ட, எம்பிலிபிட்டிய
- திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா
- வவுனியா மாவட்டம் – வெலங்காசெட்டிக்குளம்
வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்திற்கு செல்வோரிடம் நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்கள் அண்மைய நாட்களில் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, இதற்கான இலகு வழி வேலைத்திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |