சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு ஆங்கிலம் மட்டும் தெரிந்திருப்பது போதுமானதா?
சுவிட்சர்லாந்தில் பரவலாக ஆங்கிலம் பேசப்படும் நிலையில், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு ஆங்கிலம் மட்டும் தெரிந்திருப்பது போதுமானதா?
இல்லை, சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோர் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றிலாவது மொழிப்புலமை பெற்றிருப்பதை நிரூபித்தாகவேண்டும்.
சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: ஜேர்மன் மொழி, பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி மற்றும் Romansh மொழி.
சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோர், இந்த நான்கு மொழிகளில் ஒரு மொழியிலாவது புலமை பெற்றிருக்கவேண்டும்.
சுவிட்சர்லாந்தில் ஆங்கிலம் பரவலாக பேசப்பட்டாலும், அது சுவிட்சர்லாந்தின் அதிகாரப்பூர்வ மொழி அல்ல என்பதால், ஆங்கிலப் புலமை, சுவிஸ் குடியுரிமை பெறுவதில் உங்களுக்கு உதவாது.
சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் சுவிஸ் தேசிய மொழி ஒன்றில், எழுதுவதில் A2 மட்டத்திலும், பேசுவதில் B1 மட்டத்திலும் திறன் பெற்றிருக்கவேண்டும்.
ஆனால், ஒரு மொழி மட்டும் தெரிந்திருப்பது போதாது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, நீங்கள் வாழும் பகுதியிலும் உங்களுக்கு தேர்வுகள் இருக்கும் என்பதால், அந்த இடத்தில், அதாவது உள்ளூர் மட்டத்தில் பேசும் மொழியையும் நீங்கள் அறிந்துவைத்திருக்கவேண்டும்.
அதாவது, உங்களுக்கு பிரெஞ்சு மொழி நன்கு தெரியும் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், நீங்கள் Schwyzஇல் குடியமர்வீர்களானால், உங்களுக்கு ஜேர்மன் மொழி தெரிந்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும்.
ஏன் சுவிட்சர்லாந்தில் உள்ளூர் மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றால், குடியுரிமை பெரும் ஒருவர் தான் வாழும் நாட்டுடன் நன்றாக ஒருங்கிணைந்து வாழ்கிறாரா என்பதற்கு சுவிட்சர்லாந்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு உள்ளூர் மொழி அத்தியாவசியம் என்பதாலேயே, மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.