இனி கனடாவுக்கு வரவேமாட்டோம்... இந்தியாவிலிருந்து மகள் குடும்பத்தைக் காண்பதற்காக புறப்பட்ட தம்பதியர் அனுபவித்த வேதனைகள்
கனடாவில் வாழும் தங்கள் மகள் குடும்பத்தை சந்திப்பதற்காக ஆவலுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட தம்பதியர் அனுபவித்த வேதனையால், இனி கனடா பக்கமே வரமாட்டோம் என்றே கூறிவிட்டார்கள் அவர்கள்.
மும்பையைச் சேர்ந்த அங்கிதா கருட், திருமணமாகி கணவருடன் கனடாவிலுள்ள Fredericton நகரில் வாழ்ந்துவருகிறார். அவர் மும்பைக்கு பெற்றோரை சந்திக்க வந்த நிலையில், கனடாவில் மகளும் அவரது கணவரும் வாழும் இடத்தைக் காண்பதற்காக, முதல் முறையாக இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மகளுடன் புறப்பட்டிருக்கிறார்கள் அங்கிதாவின் பெற்றோர்.
மும்பையிலிருந்து தோகா வந்து, அங்கிருந்து மொன்றியல் வந்த பயணம்கூட களைப்பாகத் தெரியவில்லை என்று கூறும் அங்கிதா, ஆனால், மொன்றியலுக்கு வந்தபிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார். ஆம், மொன்றியல் விமான நிலையம் வந்தபோது, Fredericton செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
ஏர் கனடா நிறுவனம் தங்குவதற்கான ஏற்பாடோ, உணவோ, ஏன் தண்ணீரோ கூட வழங்கவில்லையாம். அத்துடன் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்ற பெயரில் அங்கிதாவுக்கு செவ்வாய்க்கிழமையும் அவரது பெற்றோருக்கு ஞாயிற்றுகிழமையும் தனித்தனியாக விமானம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விமான நிறுவனத்தார்.
நேரம் ஆக, ஆக, தன் பெற்றோருக்கு மாத்திரை போடுவதற்காக தண்ணீர் வாங்க அங்கிதா செல்ல, அங்கே ஒரு நீண்ட வரிசையாம். முக்கால் மணி நேரம் வரிசையில் நின்றுவிட்டு, வேறு வழியில்லாமல், வரிசையைத் தாண்டி முன்னே சென்று கெஞ்சிக் கூத்தாடி தண்ணீர் வாங்கிவந்திருக்கிறார் அவர்.
இதற்கிடையில் நடந்தவற்றை மொபைல் மூலம் அறிந்துகொண்ட அங்கிதாவின் கணவரான குருராஜ் மஹாஜன், தன் மனைவியும் அவரது பெற்றோரும் தங்குவதற்காக அரும்பாடு பட்டு மொபைல் மூலமாக மொன்றியலில் ஒரு ஹொட்டல் முன்பதிவு செய்துள்ளார்.
அத்துடன், நேராக தனது காரை எடுத்துக்கொண்டு மனைவியையும் அவரது பெற்றோரையும் அழைத்துவரப் புறப்பட்டுவிட்டிருக்கிறார் அவர்.
ஏழு மணி நேரப் பயணத்துக்குப் பின் மொன்றியல் சென்று மனைவியையும் அவரது பெற்றோரையும் குருராஜ் சந்திக்க, கணவனைப் பர்த்ததும் இதுவரை இருந்த மொத்த மனவேதனையும் வெடித்துப் புறப்பட, கணவரைக் கட்டிக்கொண்டு வெகுநேரம் அழுதிருக்கிறார் அங்கிதா.
இதற்கிடையில், தாங்கள் முதல் முறையாக கனடா வந்த நிலையில், தாங்கள் அனுபவித்த வேதனையால் மனம் நொந்துபோன அங்கிதாவின் பெற்றோர், இனி கனடா பக்கமே வரமாட்டோம் என்று கூறிவிட்டார்களாம்!