அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ள பிரித்தானிய பிரதமருக்கு எதிர்ப்பு
அடுத்த 15 நாட்களுக்குள் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் விலக்கிக்கொள்ள இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இங்கிலாந்தைப் பொருத்தவரை தற்போது அமுலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 24ஆம் திகதி காலாவதியாக உள்ளன.
ஆனால், இம்மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூட இருக்கும் நிலையில், தற்போதிருப்பதை போலவே நேர்மறையான சூழல் நிலவும் நிலையில், அந்த வாரமே கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படலாம் என போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை பெரிதாக வரவேற்றுள்ள நிலையில், அறிவியல் ஆலோசகர்களும் வர்த்தக யூனியன்களைச் சேர்ந்தவர்களும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
வர்த்தக யூனியன்களின் பொதுச்செயலரான Christina McAnea, அனைவரும் சீக்கிரமாக சகஜ நிலைக்குத் திரும்பவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், கொரோனா அபாயங்கள் இன்னமும் நீங்கிவிடவில்லை. இது மிக சீக்கிரம் எடுக்கப்படும் முடிவு என கூறியுள்ளார்.
பள்ளிகளில் இன்னமும் கொரோனா பரவல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து மீண்டும் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவான SAGEஐச் சேர்ந்த பேராசிரியர் John Edmunds கூறும்போது, பிரதமர் இல்ல ஆலோசகர்கள் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கவில்லை என்றும், பிரதமரின் திட்டத்தில் பல அபாயங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தொற்று நோயியல் நிபுணரான Tim Spectorம், கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது அறிவியல் பூர்வமான முடிவு அல்ல, அது அரசியல் சார்ந்த அறிவிப்பு என்று கூறியுள்ளார்.