30,000 ஊழியர்களை நீக்கி விட்டு ஒரு ஊழியருக்கு ரூ.274 கோடி ஊதியம் வழங்கும் நிறுவனம்
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம், சில நாட்களில், ரூ.274 கோடி ஊதியத்துடன் ஒரு ஊழியருக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது.
30,000 ஊழியர்களை நீக்கிய ஆரக்கிள்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆரக்கிள் நிறுவனம், சமீபத்தில் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அதில் இந்தியாவில் உள்ள 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாரிய முதலீடு மற்றும் தரவு மையங்களை கட்டுவதற்கு பாரிய அளவில் நிதி முதலீடு செய்யப்பட உள்ளதால், செலவினத்தை குறைக்கும் வகையில், இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில நாட்களில், ஒரு ஊழியருக்கு 29.7 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.274 கோடி) ஊதியத்துடன் பணி நியமனம் செய்துள்ளது.
ஒரு ஊழியருக்கு ரூ.274 கோடி
ஹிலாரி மேக்ஸன்(Hilary Maxson) ஆரக்கிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிலாரி மேக்ஸனுக்கு வழங்கப்பட உள்ள ரூ.274 கோடி ஊதியத் தொகுப்பில், அடிப்படை ஊதியமாக ரூ.8.8 கோடியும், போனஸாக ரூ.23.2 கோடியும், இடமாற்றப் படியாக ரூ.2.3 கோடியும், பங்குகளாக ரூ.241.7 கோடியும் வழங்கப்பட உள்ளது.
மேலும், குறிப்பிட்ட செயல்திறன் அளவீடுகளை அடைவதன் அடிப்படையில், ரூ.23 கோடி இலக்குடன் கூடிய வருடாந்திர செயல்திறன் அடிப்படையிலான போனஸைப் பெறுவார்.
முன்னதாக ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தில் நிர்வாகத் துணைத் தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றினார்.
மேலும், AES கார்ப்பரேஷனில் 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தில் இணைந்தது குறித்து பேசிய ஹிலாரி மேக்ஸன், "கிளவுட், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் ஆகிய துறைகளின் சங்கமத்தில் ஆரக்கிள் ஒரு அசாதாரணமான வேகத்தை உருவாக்கியுள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |