தமிழகத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்திற்கு மிகக்கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (மே 24) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.
அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ந் திகதி மாலை நிலவும்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மே 23) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்காக, அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 24) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், மே 25-ம் திகதி முதல் 28-ம் திகதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மே 26-ம் திகதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |