கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களுக்கு நிறைதமிழ் விருது வழங்கிக் கெளரவிப்பு!
கனடா தமிழாழிப் பேரவை மற்றும் தமிழாழிக் காட்சி என்பன மதிப்புக்குரிய தமிழொளி செ.நந்தகுமார் ,தமிழ்மணி க.உயிரவன் ஆகியோரின் சிறந்த முன்னெடுப்பில் 07.04.2023 அன்று கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலுவின் 60 வது அகவை நிறைவை உலகத்தமிழர்களை ஒன்றிணைத்து மெய்நிகர்வழியே இனிதே நடாத்தினார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா(கலாநிதி கல்லாறு சதீஷ்)உரையாற்றினார்.
உரையில்; தமிழைப் படிக்க வேண்டுமென்றால் ஒரிஸா பாலுவைப் படித்தால் போதும் எனும் அளவிற்கு அவர் தமிழ் பற்றிப் பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.ஒரிஸா பாலுவுக்கு எடுக்கும் விழா என்பது தமிழுக்கு எடுக்கும் விழாவாகும்.
சுவிற்சர்லாந்தில் எமது மதம் என்ன என்று கேட்டால் வேறு என்றுதான் பதிவோம் இனிவரும் காலங்களில் அங்கே தமிழ் எனப் புதிய முயற்சி செய்ய வேண்டும்.
1990 இற்குப்பின்னர் சுமார் 7 இலட்சம் தமிழர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்துள்ளார்கள், அவர்கள் இன்று உலகமெல்லாம் சுமார் 1.5 மில்லியன் மக்களாக வாழ்கிறார்கள்.
“தமிழை மதமாகவும் திருக்குறளை மறையாகவும் ஏற்றுக்கொள்ளும் நான் ஒரிஸா பாலுவை தமிழின் ஒரு நாயனாராகப் பார்க்கிறேன்.”
குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம் என்று அவர் தமிழின் அடி ஆழத்தைத்தேடி நடத்திய யாகங்கள் காலத்தால் அழியாதது,தமிழுக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்தச் சீரிய தமிழின் ஆய்வாளர் பாலு அவர்கள் கடந்த 21 மாதங்களாகப் புற்று நோய்க்கு இலக்காகித் தனது நாக்கின் ஒரு பகுதியை அகற்றிய நிலையிலும் தமிழுக்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறார்.முற்றாகப் பேச முடியாது போனாலும் இறக்கும்வரை தமிழுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்கிறார்.
உலகில் 184 நாடுகளில் வாழும் தமிழர்களில்,116 நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்னும் புள்ளிவிபரம் ஒரிஸா பாலுவிடம் உள்ளது.
தனக்கு மேலும் ஆயுள் இருந்தால் இன்னும் பலரை மேலும் பல தேசங்களில் குடி அமர்த்துவேன் என்னும் வாழும் தமிழ் நாயனார் ஒரிஸா பாலுவுக்கு சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் “நிறை தமிழ்”என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கிறது “எனும் பொருள்படக் கலாநிதி கல்லாறு சதீஷ் உரைநிகழ்த்தினார்.
நிகழ்வில் கனடாவிலிருந்து லோகேந்திரலிங்கம், சுவிஸிலிருந்து முருகவேள் மற்றும் இலங்கை, இந்தியா, தான்சானியா, மலேசியா உட்படப் மேலும் பல நாட்டுத் தமிழர்களும் ஒரிஸா பாலுவை வாழ்த்தி உரை நிகழ்த்தினர்.