வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை: ஆஸ்கர் விருதுகள் அகாடமி அறிவிப்பு!
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை ஆஸ்கர் விருதுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு அதன் அகாடமி தடை செய்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக்கை தாக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து, விழா மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித், கடந்த வாரம் அகாடமியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்தநிலையில், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் கவர்னர்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் நடிகர் வில் ஸ்மித்தின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததால் அவரை ஆஸ்கர் விருதுகளில் இருந்து ஏப்ரல் 8, 2022 முதல் 10 ஆண்டுகளுக்கு அகாடமி நிகழ்வுகள் மற்றும் விருதுகள் நிகழ்ச்சி என அனைத்திற்கும் நேரில் வருவதற்கு தடை செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிகழ்வு நடைபெற்றபோது, விழா நலன் மற்றும் சிறப்பு கருதி எந்தவொரு முடிவும் அறிவிக்கப்படாமல் இருந்தது, இந்த தாமதத்திற்கு மிக்கவும் வருந்துகின்றோம் எனவும் இத்தகைய நிகழ்வுகளுக்கு தயாராக இருப்பதில் தோல்வி அடைந்து விட்டோம் எனவும் ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்த தடைகள் அவர் எதிர்காலத்தில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதையோ அல்லது அகாடமி விருதுகளை வெல்வதையோ எத்தகைய தடையும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, "அகாடமியின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன், மதிக்கிறேன்" என வில் ஸ்மித் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கிராமங்களில் இருந்து உக்ரைனுக்குள் வரும் “Walking Dead” படை: அதிர்ச்சியூட்டும் வீடியோ!