Whatsappல் இந்த மெசேஜ் வந்தால் திரும்ப பதில் அனுப்பாதீர்கள்! சிக்கினால் ஏற்படும் மோசமான விளைவுகள்
உலகளவில் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறிவைத்துள்ளனர்.
சமீபத்தில் வாட்ஸ்அப் தொடர்பான பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாட்ஸ்அப் OTP ஸ்கேம் என்றால் என்ன தெரியுமா?
இந்த புதிய வாட்ஸ்அப் ஓடிபி மோசடியில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள், உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் இருக்கும் உங்களுடைய நண்பர் என்று கூறி, அவரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்தே ஹேக்கர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.
எப்படி சாத்தியம்?
இதைச் செய்ய ஹேக்கர்கள் (Hackers) முதலில் உங்கள் நண்பரின் அகௌண்டை ஹேக் செய்திருப்பார்கள். பின் உங்களை நம்ப வைத்து, ஹேக்கர்களின் மோசடி வலையில் உங்களை சிக்கவைக்க, மோசடிக்காரர்கள் ஒருவித அவசரநிலையை உங்களுக்கு விவரிப்பார்கள்.
உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மெசேஜ் வருவதினால் நீங்களும் உங்கள் நண்பருடன் தான் உரையாடுகிறீர்கள் என உங்களை நம்பவைத்து அவர்களின் நாச வேலையை செய்ய ஆரம்பிப்பார்கள்.
உங்களிடம் சிறிய உதவி என்று பேச்சைத் துவங்கி உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP தவறுதலாக பார்வர்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதை அவருக்குத் திருப்பி அனுப்புமாறு ஹேக்கர் உங்களிடம் வாட்ஸ்அப் செய்தி அனுப்புவார்.
மோசடிக்காரர்கள் என்பது அறியாமல் நீங்களும் உங்கள் நண்பர் தான் மெசேஜ் செய்வதாக நினைத்து உங்கள் போனிற்கு வந்த OTP எண்ணை அனுப்பி வைப்பீர்கள்.
நீங்கள் அனுப்பும் OTP எண்ணை வைத்துத் தான் ஹேக்கர்கள் OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள். மோசடிக்காரர்களுக்கு உங்கள் OTP கிடைத்த சில நிமிடங்களில் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அகௌண்டிலிருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள்.
அந்நேரம் முதல் உங்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள், காண்டாக்ட் விபரங்கள் மற்றும் பேக்கப் செய்யப்பட்ட அனைத்து தகவலுக்கும் ஹேக்கர்களுக்கு அணுகல் கிடைத்துவிடும்.
உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் நண்பர்களிடம் உங்களை போல் நடித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பண உதவி கேட்பது, பெண் நண்பர்களிடம் தவறுதலாகப் பேசுவது என்று பலவிதமான சிக்கல்களில் உங்களைச் சிக்க வைப்பது மட்டுமின்றி அவர்களையும் ஏமாற்றி இந்த நாச வேலையை ஒரு தொடர்ச் சங்கிலி போல எடுத்துச் செல்வார்கள்.
இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க two factor வெரிஃபிகேஷன் பயன்படுத்துங்கள். இந்த மாதிரியான மோசடிகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, உங்கள் போனிற்கு வரும் எந்த ஒரு OTP எண்ணையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.