அமேசானில் நெக்லஸ் ஆர்டர் செய்த கனேடிய இளம்பெண்... நெக்லசுக்குள் அஸ்தி இருந்ததால் அதிர்ச்சி
அமேசானில் நெக்லஸ் ஆர்டர் செய்திருந்தார் கனேடிய இளம்பெண் ஒருவர். ஆனால், அவருக்கு வந்த நெக்லசை பரிசோதித்தபோது அதிலிருந்த பொருள் அவரை அதிர்ச்சியடையச் செய்தது.
கியூபெக்கைச் சேர்ந்த Nadine Roy என்ற பெண், தன் பாட்டியின் நினைவாக, அவரது அஸ்தியை சேகரித்து வைக்கும் வகையில் ஒரு நெக்லசை ஆர்டர் செய்திருந்தார்.
அதாவது, இப்போது சில நாடுகளில் urn necklace என்ற ஒருவகை நெக்லஸ்கள் கிடைக்கின்றன.
அவற்றில் இறந்த தங்கள் உறவினர்களின் நினைவாக, அவர்களது அஸ்தி, அதாவது அவர்கள் உடலை எரித்தபின் கிடைக்கும் சாம்பலில் கொஞ்சத்தை எடுத்து, அந்த நெக்லசில் இருக்கும் பட்டாம்பூச்சி அல்லது ஏதாவது ஒரு வடிவம் கொண்ட சிறு பேழைக்குள் வைத்து, அதை அணிந்துகொள்ளும் ஒரு வழக்கம் உள்ளது.
அதேபோன்ற ஒரு நெக்லசைத்தான் Nadine அமேசானில் ஆர்டர் செய்திருந்தார். நெக்லஸ் டெலிவரி செய்யப்பட்டதும், அதை திறந்து பார்த்த Nadineக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
காரணம், அந்த நெக்லசிலிருந்த பேழைக்குள் ஏற்கனவே யாருடைய சாம்பலோ இருந்துள்ளது.
அதிர்ந்துபோன Nadine, அந்த நெக்லசைக் கொண்டுபோய் Ottawaவிலிருக்கும் ஒரு சுடுகாட்டிலுள்ள மரம் ஒன்றில் தொங்கவிட்டுவிட்டு வந்துவிட்டாராம்.
அவர் அந்த நெக்லசுக்காக செலுத்திய பணம் அவருக்கு திரும்ப கிடைத்துவிட்டது என்றாலும், அவர் சந்தித்த அந்த அனுபவத்தை அவரால் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.