வீடு தட்டுப்பாடு, மளிகைப்பொருட்கள் வாங்க கஷ்டம்... பணக்கார நாடுகள் படும் பாடு
ஒரு காலத்தில், தொலைக்காட்சியில், பனி படர்ந்த அழகிய மலைகளையும் பசுமையான நிலப்பரப்புகளையும், மாட மாளிகைகளையும் கண்டு, வெளிநாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் எவ்வளவு அருமையாக உள்ளன, நமக்கும் அதுபோன்ற வாழ்வு கிடைக்காதா என ஆசைப்பட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஏராளம்.
பணக்கார நாடுகள் படும் பாடு
எந்த சேட்டிலைட் தொலைக்காட்சி மூலம் உலகின் அழகைக் கண்டு களித்தோமோ, அதே தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இன்று உலகின் மற்றொரு முகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆம், பணக்கார நாடுகள் என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து முதலான நாடுகளில் கூட, மக்கள் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் காட்சிகளைக் கண்டு பலர் திகைப்படைந்தார்கள்.
THE CANADIAN PRESS/Nathan Denette
வீடு தட்டுப்பாடு, மளிகைப்பொருட்கள் வாங்க கஷ்டம்...
கனடாவிலும் சமீப காலமாக இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக வீடு தட்டுப்பாடு என்னும் ஒரு விடயம் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றுவருகிறது.
அதுவும், கனடாவில் நிலவும் வீடு பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்களும், அவர்களுடன் வரும் அவர்களுடைய குடும்பத்தினரும் ஒரு காரணம் என செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் என்ணிக்கை 35 சதவிகிதம் குறைக்கப்பட்டு, முன்பு 900,000 மாணவர்களுக்கு கல்வி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 360,000 கல்வி அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
அடுத்தபடியாக, வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடுகளை வாங்குகிறார்கள், ஆனால், பலர் அந்த வீடுகளில் வசிப்பது கூட கிடையாது. பிறகு நல்ல விலைக்கு விற்பதற்காக வீடுகளை அவர்கள் வாங்குகிறார்கள் என்று கூறி, 2026ஆம் ஆண்டு வரை வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் மளிகைப்பொருட்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை
இந்நிலையில், வீடு இல்லாமலும், மளிகைப்பொருட்கள் வாங்கவும் கஷ்டப்படும் கனேடியர்களுக்கு உதவுவதற்காக, கனடா அரசு பெரும் தொகை ஒதுக்கியுள்ளது.
ஆம், வாடகை வீடு கிடைக்காமல் கஷ்டப்படுவோருக்காக 99 மில்லியன் டொலர்களையும், மக்கள் மளிகைப் பொருட்கள் வாங்க கஷ்டப்படும் நிலையில், அதற்கு உதவுவதற்காக, ஆண்டொன்றிற்கு, 5 மில்லியன் டொலர்களையும் ஒதுக்கியுள்ளது கனடா பெடரல் அரசு.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா துணப்பிரதமரும், நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சரான ஃப்ராங்கோயிஸ் பிலிப் ஷேம்பேன் (Francois-Philippe Champagne) ஆகியோர், கனடாவின் பொருளாதார திட்டம் குறித்து அறிவிக்கும்போது, இந்த விடயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதே நேரத்தில், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வீடுகள் வழங்குவதற்காக பெடரல் அரசு, மாகாண அரசுகளுக்கு 362 மில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |