காலையில் எழுந்ததும் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை கவனித்த கனேடிய தூதரக அலுவலர்: அரசு அலட்சியம் காட்டியதாக புகார்
கனேடிய தூதரக அலுவலர் ஒருவர், கியூபா நாட்டில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தவர், ஒரு நாள் காலை தூக்கத்திலிருந்து எழும்போது தன் மூக்கிலிருந்து இரத்தம் வழிவதைக் கவனித்துள்ளார்.
பயங்கரமாக தலையும் சுற்ற, எப்படியோ தட்டுத்தடுமாறி அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ஆனாலும் அவரால் வேலை செய்ய முடியவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல் மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கே திரும்பிவிட்டார்.
அவரைப் போலவே, மற்றொரு கனேடிய துதரக அலுவலரும், தினமும் இரவு நேரத்தில் காதுகளுக்குள் ஏதோ அதிர்வதைப்போல உணர்ந்துள்ளார். கியூபா நாட்டின் தலைநகரான Havanaவுக்கு வந்து சில வாரங்களில் அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவரது கண் பார்வையும் மோசமடையத் துவங்கியுள்ளது.
சுமார் 20 கனேடிய தூதரக அலுவலர்கள் இதே பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள்.
அது ஹவானா அறிகுறி (Havana Syndrome) என்னும் ஒரு விநோத பிரச்சினை!
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அலுவலர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதாவது, இரவு நேரத்தில் ஒரு கீச்சிடும் குரல் காதுகளில் கேட்பதாகவும், அதற்குப்பின், தலை சுற்றல், மயக்கம், வாந்தி வருவது போன்ற ஒரு உணர்வு, அதைத்தொடர்ந்து மூக்கிலிருந்து இரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகளை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
இந்த பிரச்சினை, முதன்முதலாக, 2016ஆம் ஆண்டு, கியூபாவிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானா. ஆகவே, இந்த பிரச்சினை ஹவானா அறிகுறி (Havana Syndrome) என அழைக்கப்படுகிறது.
அதன் பின்னணியில் ரஷ்யா முதலான பல்வேறு நாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. மைக்ரோவேவ் அலைகள் அல்லது சோனிக் அலைகளை பரப்புவதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாகவும், வேண்டுமென்றோ அல்லது இயந்திரம் ஒன்றிலுள்ள கோளாறு காரணமாகவோ இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், அது ஏன் குறிப்பாக தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதிலில்லை.
இந்நிலையில், இந்த பிரசினை குறித்து புகாரளித்தும், கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும் கூறி, சுமார் 20 கனேடிய தூதரக அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ஆகவே, அவர்கள் கனடா அரசு மீது இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். தங்களை ஹவானாவிலிருந்து மீட்கவும், சிகிச்சையளிக்கவும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாக அவர்கள் கனடா அரசு மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.