தாத்தா கொடுத்த பரிசால் கோடீஸ்வரனான நான்கு மாதக் குழந்தை: யார் அவர் தெரியுமா?
தனது பேரனான நான்கு மாதக் குழந்தைக்கு, மிகப்பெரிய பரிசொன்றை வழங்கியுள்ளார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.
பிறந்து நான்கே மாதங்களில் கோடீஸ்வவர் ஆன குழந்தை
இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான NR நாராயணமூர்த்தி, தனது பேரனான ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு, இன்ஃபோசிஸ் பங்குகளில் 0.04 சதவிகித, அதாவது 15,00,000 பங்குகளை பரிசாகக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் 240 கோடி ரூபாய் ஆகும்.
தன் தாத்தா கொடுத்த பரிசின் மூலம், பிறந்து நான்கே மாதங்களில் கோடீஸ்வரனாகியிருக்கிறது அந்தக் குழந்தை.
நாராயணமூர்த்தியின் பிள்ளைகள்
கடந்த நவம்பரில், நாராயணமூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்திக்கும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணனுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மகாபாரதத்திலுள்ள ஒரு கதாபாத்திரத்தின் நினைவாக அந்தக் குழந்தைக்கு ஏகாக்ரா என பெயரிடப்பட்டுள்ளது.
நாராயணமூர்த்தி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனார் என்பது பலரும் அறிந்த விடயம். ரிஷி, அக்ஷதா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆக, நாராயணமூர்த்தி, சுதா தம்பதியருக்கு இப்போது மூன்று பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதாவிடம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.93 சதவிகித பங்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் 50,81,72,62,602 ரூபாய் ஆகும்.