கனேடிய மாகாணம் ஒன்றில் பரவும் நோய்: பரபரப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ள விவசாயிகள்
கனேடிய மாகாணமான Nova Scotiaவில், அதிக அளவில் பரவக்கூடிய பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்கள் பறவைகளை பாதுகாக்கும் முயற்சியில் பரபரப்பாக இறங்கியுள்ளார்கள் விவசாயிகள்.
மேற்கு Nova Scotiaவிலுள்ள பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த பண்ணையிலிருந்த 12,000 வான்கோழிகள் கருணைக்கொலை செய்யப்பட்டன.
கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி, பிப்ரவரி 3ஆம் திகதி பயங்கரமாகப் பரவக்கூடிய பறவைக்காய்ச்சல் வைரஸான H5N1 என்னும் வைரஸ் மேற்கு Nova Scotiaவிலுள்ள பண்ணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பிப்ரவரி 1 அன்றும் மாகாணத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பண்ணை ஒன்றிலும் அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, பண்ணைகளில் ஆள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது முதல், பண்ணைகளுக்கு டெலிவரிக்காக வரும் ட்ரக்குகளின் டயர்கள் கழுவப்படுவது வரையிலான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Nova Scotiaவைப் பொருத்தவரை, அங்குள்ள வான்கோழிகள் உள்ளூரில்தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால், வர்த்தக ரீதியில் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவு ஆய்வு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பறவைக்காய்ச்சல் வைரஸ், பொதுவாக சாதாரணமாக பறவைகளில் காணப்படக்கூடியதுதான் என்றும், அது கோழிகள், வான்கோழிகள், காடைகள் முதல், வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் காட்டுப்பறவைகள் வரை தாக்கலாம் என்றும் உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.