சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை: சொந்த வீடா வாடகை வீடா எது குறைந்த செலவு பிடிக்கும் விடயம்?
மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பது சாதாரணமான ஒரு விடயமாக கருதப்படுகிறது.
சொல்லப்போனால், ஐரோப்பாவிலேயே, சுவிட்சர்லாந்தில்தான், 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதற்கு பல்வேறு சிக்கலான காரணங்கள் உள்ளன என்றாலும், முக்கிய காரணம், வீடு வாங்குவதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதுதான்!
வீடு விலை அதிகமாக இருப்பதும், வீடு வாங்கவேண்டுமானால் 20 சதவிகித தொகையை டெபாஸிட் செய்யவேண்டும் என்பதும் சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவதற்கு தடையாக உள்ளன. ஆகவே, பெரும்பாலானோர் வாடகை வீடுகளைத் தேர்வு செய்கிறார்கள்.
குறுகிய காலம் சுவிட்சர்லாந்தில் வாழும் திட்டம் கொண்டவர்களுக்கு வாடகை வீடுகள் இலாபம் என்றாலும், வீடு வாங்கும் திறன் உள்ளவர்களைப் பொருத்தவரை, அவர்கள் நீண்ட காலம் சுவிட்சர்லாந்தில் வாழும் திட்டம் இருக்குமானால் சொந்த வீடு வாங்குவதே இலாபம் ஆகும்.
அதற்கு ஒரு முக்கிய காரணம், சுவிட்சர்லாந்து குறைந்த அளவே பணவீக்கம் ஏற்படக்கூடிய நாடு என்பதால், அங்கு கடனுக்கு வட்டி விகிதமும் குறைவுதான். ஆகவே, நீண்ட காலம் சுவிட்சர்லாந்தில் வாழும் திட்டம் கொண்டவர்கள் கடன் வாங்கி வீடு கட்டுவது அவர்களுக்கு இலாபகரமானதாக அமையும்.
கடன் வாங்கி திரும்பச் செலுத்துவதை விட வாடகை வீட்டுக்கு ஆகும் செலவு 20 சதவிகிதம் கூடுதல் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், இந்த உக்ரைன் போர் வந்தாலும் வந்தது, உலகமெங்குமே ஒரு பொருளாதார நிலையின்மை உருவாகியுள்ளது. ஆகவே, வட்டி விகிதங்கள் உயரவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், 2022இல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், 13 ஆண்டுகளில் முதன்முறையாக வாடகைக்கு வீடு பிடிப்பது செலவு குறைவான விடயமாக ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆக, அப்படிப்பட்டவர்கள், மற்றும் குறைந்த வருவாய் கொண்டவர்கள் ஆகியோரைப் பொருத்தவரையில், வாடகைக்கு வீடு பிடிப்பதே அவர்களுக்கு இலாபமானதாக இருக்கும்.