பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: நீதிமன்றம் செல்ல முடிவு
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட அந்த உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், உணவகத்தைக் காப்பாற்ற உணவகம் தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
ஆகவே, உணவகத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, நீதிமன்றம் செல்ல உணவக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகம் அமைந்திருக்கும் கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும்.
அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துடன் குத்தகை முடிவடைந்துவிட்ட நிலையில், அந்தக் கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது. .
ஆகவே, இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டுவந்த வீராஸ்வாமி உணவகத்தை மூடும் நிலை உருவாகியுள்ளது. வீராஸ்வாமி உணவகம், மகாத்மா காந்தி முதல், ராணி இரண்டாம் எலிசபெத் வரை வருகை புரிந்த புகழ் பெற்ற உணவகம் ஆகும்.
உணவகத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள்
வீராஸ்வாமி உணவகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகவும், இந்திய பிரித்தானிய கலாச்சார உறவுகளின் அடையாளமாகவும் பார்க்கப்படுவதால், உணவகத்தை காப்பாற்ற பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டுவந்தார்கள்.
உணவகத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினர் 20,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் பக்கிங்காம் அரண்மனையிடம் ஒப்படைத்தார்கள்.

என்றாலும், அவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால், உணவகம் இருக்கும் கட்டிடத்தை நிர்வகிக்கும் Crown Estateஐ நீதிமன்றம் கொண்டு செல்ல வீராஸ்வாமி உணவக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
உணவகத்தின் இணை உரிமையாளரான ரஞ்சித் (Ranjit Mathrani), Crown Estateஉடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துவிட்டதால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 29 ஆம் திகதி, வீராஸ்வாமி உணவகம் தொடர்பான வழக்கு துவங்க உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |