ஆசிய கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்தியா - தற்போது எடுத்த முடிவு என்ன?
பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் போட்டியில், இந்தியா விளையாடும் ஆட்டத்தை பொதுவான இடத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது.
மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம்
இதனையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் சமீபத்தில் கூட்டத்தை நடத்தியது.
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்தது. இதனால், கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால், இந்திய, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இது தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
பொதுவான இடத்தில் போட்டி நடத்த முடிவு...?
இந்நிலையில், இந்தப் பிரச்சினை குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகள் இடையே பலக்கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
சமீபத்தில் ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க சென்ற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளின் வாரிய நிர்வாகிகள் சந்தித்து நடத்திய ஆலோசனையில் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும், இந்திய அணி மோதும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.