மீண்டும் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை; தசுன் சானக்க, ஜனித் லியனகேவின் போராட்டம் வீண்
pakistan beat sri lanka by 37 runs in odi tri series: முத்தரப்பு தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி, 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
சல்மான் அலி ஆகா சதம்
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர், நேற்று பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் தொடங்கியது.

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி, சல்மான் அலி ஆகாவின் அதிரடி சதத்தில் 49.5 ஓவர்கள் முடிவில் 305 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சல்மான் அலி ஆகா 107 ஓட்டங்கள் குவித்தார்.

இலங்கை தரப்பில் இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் வெற்றி
306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 48.1 ஓவர்களில் 268 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக, பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்கள் குவித்தார்.
ஜனித் லியனகே 60 ஓட்டங்களும் மற்றும் தசுன் சானக்க 28 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல போராடினர்.

இருவரும் ஆட்டமிழந்த பின்னர், மீதமுள்ள வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம், பாகிஸ்தான் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தானுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.