இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ரிஸ்வான் - நவாஸ்: பாகிஸ்தான் திரில் வெற்றி
ஆசிய கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர்.
தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய சர்மா மற்றும் ராகுல் பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கினர். சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு 28 ஓட்டங்களிலும், ராகுல் 20 பந்துகளை சந்தித்து 28 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த விராட் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 60 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை அதிரடி காட்டிவந்த ஹார்திக் பாண்டியா ஏமாற்றமளிக்க, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர்.
பாபர் அசாம் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பகர் சமான் 15 ஓட்டங்களில் வெளியேறினார். ஆனால், அடுத்துவந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நவாஸ் 20 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களில் 26 ஓட்டங்கள் தேவைப்பட, பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்து திரில் வெற்றி பெற்றது.