பாகிஸ்தானின் புதிய ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்! அதன் பொருள் என்ன தெரியுமா?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்": என்ற புதிய ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டது.
"ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்ட இந்த துல்லியமான தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், ஒரு முக்கிய பயங்கரவாத அமைப்பின் தளபதி கொல்லப்பட்டதோடு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
பாகிஸ்தானின் எதிர் தாக்குதல்
இந்தியாவின் இந்த பதிலடி நடவடிக்கைக்கு பதிலாக பாகிஸ்தான், எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது.
குறிப்பாக, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், இந்திய ராணுவத்தின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் இந்த அச்சுறுத்தல்களை திறமையாக முறியடித்து வருகின்றன.
ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்
இதனிடையே, பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தோல்வியடைந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்" என்ற புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அரபு மொழியில் "பன்யன் அல்-மர்சூஸ்" என்றால் "ஈயத்தால் ஆன சுவர்" அல்லது "கட்டிடம் போல் தனது பாதையில் அணிவகுப்பது" என்று பொருள்படும்.
இந்த பெயரின் மூலம், பாகிஸ்தான் தன்னை ஒரு வலிமையான, அசைக்க முடியாத சக்தியாகவும், ஒரு பாதுகாப்பு அரணாகவும் சித்தரிக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |