தோனியை பார்த்து மெய்சிலிர்த்து போன பாகிஸ்தான் வீரர் - கொண்டாடும் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடனான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் இளம் வீரர் ஷாநவாஸ் தஹானி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கண்ட தலைச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கொண்டாடப்படும் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எதிரணியில் ஆடும் இளம் வீரர்கள் போட்டி முடிவடைந்த பின்னர் தோனியுடன் உரையாடி சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்திய அளவில் மட்டுமல்லாமல் வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் இளம் வீரர் ஷாநவாஸ் தஹானி தோனியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக இருந்த தோனியுடன் ஷாநவாஸ் தஹானி போட்டோ எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தோனியின் லெவலை பற்றி பேச வேண்டும் என்றால் நான் நீண்ட நேரம் எடுத்து கொள்வேன்.
அவரை நேரில் சந்தித்தது என்னுடைய கனவு நிஜமான தருணமாக இருந்தது. அதனை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். அவருடைய வார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் நீ விரும்பும் கிரிக்கெட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என தோனி தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியும், பெரியவர்களை மதிப்பதுகுறித்தும் அவர் பேசியதாக ஷாநவாஸ் தஹானி கூறியுள்ளார்.