தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்! குவிக்கப்பட்ட ரன்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில்லிங்கான வெற்றியை பெற்றுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
WHAT A MATCH!
— ICC (@ICC) April 2, 2021
Pakistan win the last-ball thriller by three wickets ?#SAvPAK | https://t.co/48JIJIe0Hb pic.twitter.com/wdMRUpHHzw
இதன் பின்னர் வான்டெர் துஸ்செனும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் திரட்டினர். மில்லர் 50 ரன்களில் (56 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார்.
கடைசி வரை நிலைத்து நின்று அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவிய வான்டெர் துஸ்சென் தனது முதலாவது சர்வதேச சதத்தை ருசித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்தது.
வான்டெர் துஸ்சென் 123 ரன்களுடன் (134 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.
பின்னர் 274 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. பஹார் ஜமான் 8 ரன்னில் ரபடாவின் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
For his sensational century, @babarazam258 is adjudged Player of the Match.#SAvPAK pic.twitter.com/CHKf6kDCrC
— ICC (@ICC) April 2, 2021
இதைத் தொடர்ந்து இமாம் உல்-ஹக்கும், கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். அபாரமாக ஆடிய பாபர் அசாம் தனது 13-வது சதத்தை எட்டினார்.
அசாம் 103 ரன்களிலும் (104 பந்து, 17 பவுண்டரி), இமாம் உல்-ஹக் 70 ரன்னிலும் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறியதால் பாகிஸ்தான் தடுமாற்றத்திற்கு உள்ளானது.
விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தனது பங்குக்கு 40 ரன் எடுத்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பெலக்வாயோ வீசினார்.
இதன் முதல் பந்தில் ஷதப்கான் (33 ரன்) கேட்ச் ஆனார். அடுத்த 3 பந்துகளில் பஹீம் அஷ்ரப் ரன் எடுக்காமல் விரயமாக்கியதால் பரபரப்பு உண்டானது.
இதனால் 2 பந்தில் 3 ரன் தேவையானது. இந்த சூழலில் 5-வது பந்தில் பஹீம் அஷ்ரப் 2 ரன் எடுத்தார்.
தொடர்ந்து கடைசி பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.