இரண்டாவது போட்டியிலும் தோல்வி! தொடரை இழந்த மகளிர் இலங்கை அணி
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததால் இலங்கை அணி தொடரை இழந்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா மட்டும் 35 ஓட்டங்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அனம் அமின், சனா, நிதா தார், ஐமன் அன்வெர் மற்றும் தூப ஹஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் தடுமாறியது. 34 ஓட்டங்களுக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் கேப்டன் மரூப், ஆயிஷா இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இருவரும் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்கள் சேர்த்ததன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
31 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்ட ஆயிஷா நசீம் ஆட்டநாயர் விருதை பெற்றார்.