சர்ச்சையில் சிக்கிய இளவரசரின் பிள்ளைகளை மிரட்டினாரா வில்லியம்? அரண்மனை விளக்கம்
மன்னர் சார்லசுடைய தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியும் சர்ச்சையில் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து, அவர்களுடைய பிள்ளைகளை இளவரசர் வில்லியம் மிரட்டியதாக ஒரு தகவல் வெளியாகியது.
சர்ச்சையில் சிக்கிய இளவரசர்
மோசமான பாலியல் குற்றவாளியும், அமெரிக்கக் கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு ராஜ குடும்பத்துக்கு பெரும் அவமானத்தைக் கொண்டுவந்தது.

இந்நிலையில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததும், எப்ஸ்டீன் சிறையிலிருந்த விடுவிக்கப்பட்டதைக் கொண்டாட, தன் இரண்டு மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதும் தற்போது தெரியவர, மன்னரை பொது இடத்தில் மக்கள் மடக்கிக் கேட்கும் தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் மிரட்டியதாக தகவல்
இந்நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள ஆண்ட்ரூ, சாரா தம்பதியரின் மகள்களான, இளவரசிகள் பீட்ரைஸையும் யூஜீனியையும் இளவரசர் வில்லியம் மிரட்டியதாக எமிலி (Emily Maitlis) என்னும் முன்னாள் பிபிசி ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரூவும் சாராவும், ராஜ குடும்பத்துக்கு சொந்தமான, ராயல் லாட்ஜ் (Royal Lodge) என்னும் பிரம்மாண்ட மாளிகையில் தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்ட்ரூ, சாராவை அங்கிருந்து வெளியேற தூண்ட தம்பதியரின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி உதவவில்லையென்றால், அவர்களுடைய பட்டங்களைப் பறிப்பது குறித்து மீளாய்வு செய்யவேண்டியிருக்கும் என அவர்கள் இருவரையும் இளவரசர் வில்லியம் மிரட்டியதாக எமிலி தெரிவித்துள்ளார்.
அரண்மனை விளக்கம்
எமிலியின் கூற்று குறித்து பக்கிங்காம் அரண்மனை வட்டாரத்திடம் விசாரித்தபோது, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை இளவரசர் வில்லியம் சந்தித்ததாக கூறப்படும் விடயத்தில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் சாசனத்தின்படி, இளவரசர் வில்லியமால் இளவரசிகளின் பட்டங்களைப் பறிக்க இயலாது என்றும் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |