குடும்பத்தில் 117 பேரை பறிகொடுத்த பாலஸ்தீன-கனேடியரின் உருக்கமான பதிவு
கனடாவில் வசிக்கும் பாலஸ்தீனப் பூர்விகத்தைச் சேர்ந்தவர் அதல் அபு லெப்தேஹ். தனது உலகமே உடைந்துபோன வேதனையில் இருக்கிறார்.
காசாவில், இஸ்ரேலின் விமானத் தாக்குதல்களில் அவரது 117க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்ததாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 98,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்ரேலின் தாக்குதல்கள், பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்லாமல், கனடாவின் ஹாமில்டனில் உள்ள பலரின் குடும்பத்திலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
"என் குடும்பத்தின் மூன்றில் ஒரு பங்கை நான் இழந்தேன்," என்று அதல் அபு லெப்தேஹ் கூறியுள்ளார். இந்த துயரமான இழப்பு அவரின் வாழ்க்கையை முழுமையாக மாறச் செய்துள்ளது.
"வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்துள்ளேன். இன்றைய சூழலில் உயிருக்கு பெரிதாக ஒரு மதிப்பில்லை," என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
அவரது குடும்பத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமல்லாமல், ஹாமில்டனில் மட்டும் 11க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதேவிதமான இழப்புகளை சந்தித்துள்ளன.
"நான் 117 குடும்ப உறுப்பினர்களை இழந்தேன் — சகோதரர்கள், சகோதரிகள், இரண்டு மாமாக்கள், மனைவியின் உறவுகள், மைந்தர்கள்," என்று கூறிய அவர், அவர்கள் அனைவரின் கனவுகள், எதிர்காலம் எல்லாம் புதைந்துவிட்டதாக கூறினார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பல்கலைக்கழகத்தைப் புதிதாக முடித்த சகோதரிகள், அவர்களது கல்விக் கனவுகளை நிறைவேற்றிய சில மாதங்களில் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தனர். “அவர்களால் சிறந்த எதிர்காலம் காண முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
அபு லெப்தேஹ் தனது சகோதரரின் மகன் அவரை தாக்குதலுக்கு முன்பு தொடர்பு கொண்டதை வேதனையுடன் நினைவுகூர்ந்தார். "அந்த நாளுக்குப் பிறகு அவருடைய வீட்டின்மீது குண்டுவீசப்பட்டது. அவருடன் நான் விடைபெறவே முடியவில்லை," என்றார். அவர் தனது குடும்பத்தினருடன் உரையாட முடியாத நிலையை அவர் தாங்க முடியாத அளவிற்கு வேதனையை அனுபவிக்கிறார்.
காசாவில் இருந்து உலகம் பார்க்கும் போது, இது ஒரு புதிய 'ஹோலோகாஸ்ட்' என்று அவர் இந்த தாக்குதல்களை குறித்துப் பேசினார். பல அரசியல் அமைப்புகளின் உடந்தையால் உலகம் இந்த இனப்படுகொலையை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அபு லெப்தேஹ் குறிப்பாக கனடா மற்றும் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"கனடா மனித உரிமைகளின் நிலைபாடுகளில் இருந்தது. ஆனால் இன்று, ஜஸ்டின் ட்ரூடோ சரித்திரத்தின் தவறான பக்கம் சென்றுவிட்டார்," என்று அவர் கூறினார்.
காசா மீதான தாக்குதல்களால் தனது குடும்பத்தை மட்டுமல்ல, பல பிள்ளைகளின் கனவுகளையும் இழந்த அதல் அபு லெப்தேஹ், உலகம், குறிப்பாக கனடா, இனி தாமதிக்காமல் மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Adel Abu Lebdeh, Palestinian-Canadaian, 117 members of his family were killed by Israeli airstrikes in Gaza, Israel Palestinain war