ஆட்டத்தை நிறுத்த சொன்ன ரிஷப் பண்ட்.. வெடித்த சர்ச்சை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை நிறுத்துமாறு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவர் ரிஷப் பண்ட் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மெக்காய் வீசிய அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளை பாவெல் சிக்ஸருக்கு விளாசினார். 3வது பந்தை மெக்காய் புல்டாசாக வீச அதையும் பாவெல் சிக்ஸராக்கினார். ஆனால் அந்த பந்து பாவெலுக்கு மார்பு அளவுக்கு வந்ததால் நோ-பால் என பவுண்டரி எல்லையில் வெளியே இருந்து ரிஷப் பண்ட் கூறினார். கள நடுவர்கள் நோ-பால் என அறிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த பண்ட் தனது அணி வீரர்களை தொடர்ந்து ஆட வேண்டாம் வாருங்கள் என்று அழைத்தார்.
களத்தில் இருந்த டெல்லி வீரர்கள் நடுவர்கள் சமாதானப்படுத்தினர். எனினும் திரும்ப வருமாறு பண்ட் அவர்களை அழைத்த வண்ணம் இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டு தொடர்ந்து டெல்லி அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர். போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை குலுக்காமல் சென்றனர்.
இது குறித்து பேசிய ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சன், 'நடுவரின் முடிவே இறுதியானது. அது நோ-பால் இல்லை. ஆனால் பேட்டிங் செய்யும் அணி நோ-பால் கேட்பது வாடிக்கை தான்' என தெரிவித்தார். ஆனால் ரிஷப் பண்ட் கூறும்போது, 'அது நோ-பால் தான். நடுவரின் முடிவு குறித்து ஏதும் செய்ய முடியாது. ஏதும் எங்கள் கையில் இல்லை' என தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன், நடுவர்களின் முடிவு சரியோ தவறோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.