இந்தியரை CEO-வாக நியமித்த டுவிட்டர்! பதவியை ராஜினாமா செய்த ஜேக் டார்ஸி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரில் சிஇஓவாக இருந்த ஜேக் டார்ஸி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகில் பல்வேறு நாட்டு மக்களும் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் டுவிட்டரும் ஒன்று, இது முக்கியமாக, தகவல் பரிமாற்றம் செய்யும் தளமாக உள்ளது. இந்நிலையில் டுவிட்டர் சிஇஓவான ஜேக் டார்ஸி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக தொழில்நுட்ப தலைவராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த பரக் அகர்வால் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை ஐஐடியில் பயின்ற பரக் அகர்வால் , பின்னர் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் சிஇஓ அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
இது குறித்து ஜேக் டார்ஸி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த விஷயம் யாருக்கும் தெரியுமா என்பது தெரியவில்லை, நான் டுவிட்டரில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஜேக் டார்ஸியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியிருந்தது. ஏனெனில், இவர் டுவிட்டர் நிறுவனத்தின் மீது சரிவர கவனம் செலுத்தவில்லை மாறாக அவர் தான் நடத்தும் ஸ்கொயர் இன்க் நிறுவனத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.