தாய்ப்பாலில் கலந்த பிளாஸ்டிக்! பேரதிர்ச்சி தரும் ஆய்வு: எச்சரிக்கை செய்தி
முதல் முறையாக மனித தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பாலிமர்ஸில் (Polymers) எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, முதல் முறையாக மனித தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (Microplastics) கண்டறியப்பட்டது.
ரோமில் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய் பால் மாதிரிகளை ஆய்வுக் குழு ஆய்வு செய்தது.
அதிர்ச்சியூட்டும் விதமாக, அதில் 26 தாய்ப்பால் மாதிரிகளில் (76 சதவீத தாய்மார்களின் தாய்ப்பாலில்) மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (நுண்-பிளாஸ்டிக் பொருட்கள்) கண்டறியப்பட்டது.
பிளாஸ்டிக் பேக்கேஜிங் பயன்படுத்திய தாய்மார்கள் எவ்வளவு உணவு மற்றும் பானங்களை உட்கொண்டார்கள் என்பதையும், பிளாஸ்டிக்குடன் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
ஆனால் தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்புடன் எந்த தொடர்பையும் அவர்கள் காணவில்லை, இது சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் பரவலான இருப்பு "மனித வெளிப்பாட்டைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது" என்று ஆய்வு ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
இதே ஆராய்ச்சி குழு 2020-ல் மனித நஞ்சுக்கொடிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற சில ஆய்வுகலின்படி, மனித இரத்தம், பசும்பால் மற்றும் பாலிப்ரொப்பிலீன் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்துள்ளன.
முந்தைய ஆய்வுகள் மனித உயிரணுக்கள், ஆய்வக விலங்குகள் மற்றும் கடல் வனவிலங்குகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் நச்சு விளைவுகளைக் குறிப்பிட்டிருந்தாலும், வாழும் மனிதர்களின் விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை.
சமீபத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் காணப்படும் பாலிஎதிலீன் (polyethylene), பாலிப்ரோப்பிலீன் (polypropylene) மற்றும் பாலிவினைல் குளோரைடு (polyvinyl chloride) ஆகியவற்றால் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
Image: Unsplash/Representative
ஆய்வு குழுவால் 2 மைக்ரானை விட சிறிய துகள்களை ஆய்வு செய்ய முடியவில்லை, ஆனால் தாய்ப்பாலில் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் கூட இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை ஆராய்ச்சி குழுவால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள், செயற்கை துணிகளால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு இத்தாலியில் உள்ள யுனிவர்சிட்டா பாலிடெக்னிகா டெல்லா மார்ச்சேவின் ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான வாலண்டினா நோட்டார்ஸ்டெபானோ அறிவுறுத்தினார்.
அதேசமயம், இது போன்ற ஆய்வுகள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதைக் குறைக்கக்கூடாது, மாறாக, மாசுபாட்டைக் குறைக்கும் சட்டங்களை ஊக்குவிக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.