கனடாவில் கல்வி! பல சிக்கல்களை சந்திக்கும் வெளிநாட்டு மாணவர்கள்- அதிர்ச்சியூட்டும் செய்தி
கனடாவில் வேலை என்ற கனவுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர் பலர், வீட்டு வாடகை, விலைவாசி போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல், அமைதியாக சொந்த நாடு திரும்புவதைக் குறித்த ஒரு கவலையை ஏற்படுத்தும் செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
தற்போது அதேபோல கவலையை ஏற்படுத்தும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
கவர்ச்சியான விளம்பரங்கள்
பிள்ளைகள் கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றால், படிப்பு முடிந்ததும் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள், நாமும் வாழ்வில் முன்னேறிவிடலாம் என்னும் ஆசையில் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர் பலர்.
இந்தியாவைப் பொருத்தவரை, உங்கள் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்புங்கள், கனடா சென்றதுமே அவர்களுக்கு ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் செலவழித்த பணத்தை சீக்கிரம் திரும்பப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களால் வீட்டுக்கும் பணம் அனுப்பமுடியும் என்று கூறும் ஏராளம் விளம்பரங்கள் வெளியாகின்றன.
கனடாவுக்குச் சென்றும் பணத்துக்கு பெற்றோரை எதிர்பார்க்கும் மாணவர்கள்
ஆனால் உண்மை நிலவரம் அப்படியில்லை என்கிறார் சுமித் (Sumit Baliyan) என்னும் இந்திய மாணவர். ஹாமில்ட்டனிலுள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் சுமித், இங்கே எல்லாமே விலை அதிகமாக உள்ளன, விலைவாசியை சமாளிக்க முடியாமல், கனடாவுக்கு வந்த பிறகும் மாணவர்கள் பணத்துக்காக இந்தியாவிலிருக்கும் தங்கள் பெற்றோரின் கையை எதிர்பார்க்கும் நிலை உள்ளது என்கிறார்.
வேலை கிடைப்பதில் கஷ்டங்கள் ஒரு பக்கமிருக்க, அத்துடன் வீட்டு வாடகை, உணவுப்பொருட்கள் விலை எல்லாம் சேர்ந்து நிலைமையை மோசமாக்கிவிடுகின்றன என்கிறார் சுமித்.
கல்லூரிகள், கனேடிய மாணவர்களுக்கு குறைவான கட்டணம் வாங்குகின்றன, வெளிநாட்டு மாணவர்களிடமோ பல மடங்கு கட்டணம் வாங்குகின்றன.
வீட்டு உரிமையாளர்கள் எக்கச்சக்கமாக வாடகையை உயர்த்துகிறார்கள், கேட்ட தொகையைக் கொடுக்காவிட்டால் வெளியேற்றிவிடுவோம் என மிரட்டுகிறார்கள். ஏராளமான மாணவர்கள் தங்கியிருக்கும் கூட்டமான ஒரு அறையில், ஒரு படுக்கையின் வாடகை மட்டும் 800 டொலர்கள் என்று கூறும் சுமித், பல மாணவர்கள் உணவுக்காக உணவு வங்கிகளை சார்ந்திருக்கும் ஒரு நிலை உள்ளது என்கிறார்.
இதற்கிடையில் கனடாவோ, இந்த ஆண்டு 753,000 சர்வதேச மாணவர்களை வரவேற்க இருப்பதாக பெருமையடித்துக்கொள்கிறது.
அதற்கும் காரணம் உள்ளது. அதாவது, இந்த சர்வதேச மாணவர்கள் ஆண்டொன்றிற்கு கனடா பொருளாதாரத்திற்கு சுமார் 25 பில்லியன் டொலர்கள் பங்களிப்பைச் செய்கிறார்களே!