பாரிஸ் உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண் உயிரிழப்பு: கிரையோதெரபி சிகிச்சையால் விபரீதம்!
பாரிஸ் நகரில் உள்ள பிரபல உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சிக் கூடத்தில் இளம்பெண் உயிரிழப்பு
திங்கட்கிழமை மாலை "ஆன் ஏர்" (On Air) என்ற உடற்பயிற்சிக் கூடத்தில் கிரையோதெரபி(Cryotherapy) சிகிச்சை மேற்கொண்ட 29 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 34 வயதுடைய மற்றொரு பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்திற்கு கிரையோதெரபி அறையில் ஏற்பட்ட திரவ நைட்ரஜன் கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ குழுவினர், பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மூச்சு திணறல் மற்றும் இதய செயலிழப்புடன் கண்டறிந்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் ஊழியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு உதவ முயன்ற மூன்று நபர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 150 பேர் உடனடியாக உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கிரையோதெரபி சிகிச்சை என்றால் என்ன? அதன் ஆபத்துகள்!
கிரையோதெரபி என்பது உடலை மிகக் குறைந்த வெப்ப நிலைக்கு (-110°C முதல் -140°C வரை) குறுகிய நேரம் உட்படுத்தும் சிகிச்சை முறையாகும்.
இது குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மத்தியில் தசை வலி, வீக்கம் மற்றும் உடலில் ஏற்படும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது என்ற நம்பிக்கையில் பிரபலமாக உள்ளது.
இருப்பினும், இந்த சிகிச்சையில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |