பிரான்ஸ் தெருக்களில் பெரும் குழப்பம்: பொலிசாருடன் மோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
பிரான்ஸ் நாட்டில், Block Everything என்னும் அமைப்பினர் நாடு முழுவதையும் முடக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் மோதல் நடைபெற்றுவருகிறது.
பிரான்ஸ் தெருக்களில் பெரும் குழப்பம்
பாரீஸில் மட்டுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆங்காங்கு தடுப்புகளை ஏற்படுத்தி அவற்றிற்கு தீவைத்து நாட்டை முடக்க Block Everything அமைப்பினர் முயற்சித்துவருகிறார்கள்.
பல இடங்களில் சாலைகளின் குறுக்கேயும் ரயில் பாதைகளிலும் டயர்கள் தீவைத்து எரிக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
AFP
பாரீஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார் மீது குப்பைத்தொட்டிகளையும் flare என்னும் எரியும் உபகரணங்களையும் வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 80,000 பொலிசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுவருகிறார்கள்.
என்ன பிரச்சினை?
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்ட முன்னாள் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou), அரசின் கடனைக் குறைக்கும் வகையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு அரசு விடுமுறைகளை குறைக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தார். ஆனால், அது பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
AFP
இந்நிலையில், பேய்ரூவில் கொள்கைளுக்கு எதிராக உருவான, Block Everything என்னும் அமைப்பு, இன்று, அதாவது, செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி, நாடு முழுவதிலும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
முந்தைய பிரதமரான பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்த நிலையில், அவரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்ததுடன், ஜனாதிபதி மேக்ரானையும் பதவி விலக வைக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டிருந்தன.
எதிர்பார்த்ததுபோலவே பேய்ரூ நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். ஆகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டியதாயிற்று.
AFP
Block Everything அமைப்பு நாட்டை முடக்க திட்டமிட்டிருந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ஜனாதிபதி மேக்ரான், விரைந்து செயல்பட்டு செபாஸ்டியன் லெக்கார்னு என்பவரை பிரதமராக நியமித்துள்ளார்.
ஆனாலும், சொன்னபடியே Block Everything அமைப்பினர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள், பிரான்சின் பல்வேறு பகுதிகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |