பிரான்சில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர் மோதி இளம்பெண் பலி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இளம்பெண் ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர் மோதி பலியானதைத் தொடர்ந்து, அவற்றுக்கு தடை விதித்துவிடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம், பாரீஸில் வாழும் 32 வயதுள்ள இத்தாலிய பெண் ஒருவர் மீது மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் அவர் பரிதாபமாக பலியானார்.
அவர் மீது மோதிவிட்டு ஸ்கூட்டரை செலுத்தியவரும், அவருடன் பயணித்தவரும் அதே ஸ்கூட்டரிலேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். அவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில், 10 நாட்களுக்குப் பிறகே அவர்கள்
பொலிசில் சிக்கியுள்ளார்கள். சிக்கியவர்களில் ஒருவர் ஒரு செவிலியர் என தெரியவந்துள்ளது. 2019க்குப் பிறகு, இத்துடன் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர் மோதி பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ள நிலையில், நகர தெருக்களில் இந்த ஸ்கூட்டர்களை அனுமதிப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், போக்குவரத்து பொறுப்பை வகிக்கும் பாரீஸ் துணை மேயரான David Belliard, இந்த ஸ்கூட்டர்கள் பாதசாரிகளுக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வரையில் முன்னேறினால் நல்லது, அல்லது அவற்றை முற்றிலுமாக தடை செய்துவிடுவது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.