கனடாவில் பூங்கா ஒன்றில் கொத்துக் கொத்தாக இறந்துகிடந்த அணில்கள்... விஷம் வைக்கப்பட்டதா?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஒரு பூங்காவில், மரங்களின் அடியில் அணில்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்ததைக் கண்ட ஒருவர் அது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
Richmondஇல் அமைந்துள்ள அந்த பூங்காவில் பல அணில்கள் இறந்துகிடந்ததுடன், பல அணில்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அணில்களின் உடலில் நச்சுப்பொருள் ஒன்று இருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தார்கள். தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், பைன் மரங்களைத் தாக்கும் ஒருவகை வண்டுகளால் அந்த நச்சுப்பொருள் உருவாகுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நச்சை உட்கொண்டதால்தான் அந்த அணில்கள் இறந்ததாகவும், நோய்வாய்ப்பட்டதாகவும் நம்பப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், வேண்டுமென்றே விஷம் வைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும்
இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், பொதுமக்களின் அக்கறையை பாராட்டியுள்ள பொலிசார், யாராவது
சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொள்வதாக தெரியவந்தால் தங்களுக்கு தகவல்
தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.