வெளிநாட்டில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளி கனேடிய குடும்பம்: வெளிவரும் பின்னணி
ஸ்பெயின் நாட்டில் விமானத்தில் மயக்கமடைந்ததாக கூறி, இந்திய வம்சாவளி கனேடிய தம்பதியை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ரொறன்ரோ திரும்ப Air Transat விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் ஷான் மேத்தா. இவருடன் மனைவியும், வயதான பெற்றோரும் 12 வயது மகளும் ஜூலை 10ம் திகதி விமானத்தில் ஏறியுள்ளனர்.
சம்பவத்தின் போது பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தினுள் வந்தவண்ணம் இருந்துள்ளனர். இந்த நிலையில் தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்பட்டு, திடீரென்று இருக்கையிலேயே மயக்கமுற்றுள்ளார் மேத்தா.
உடனடியாக விமான ஊழியர்களும், மருத்துவரான பயணி ஒருவரும் உதவ முன்வந்துள்ளதுடன், அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டதில், சகஜ நிலைக்கு மேத்தா திரும்பியுள்ளார். தொடர்ந்து விமான நிலைய மருத்துவ உதவிக்குழுவினர் வரவழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சிக்கல் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் திடீர் திருப்பமாக, விமான ஊழியர் ஒருவர் மேத்தாவை அணுகி, இப்படியான சூழலில் மேத்தாவுடன் விமானம் புறப்படுவது பொருத்தமானது அல்ல என விமானி கருதுவதாக கூறியுள்ளார். மேலும், தாமாகவே முன்வந்து வெளியேறாவிட்டால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, விமான பயணிகளுக்கான மருத்துவ தொடர்பு நிறுவனமான MedAire விமானியுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் தொடர்புடைய பயணி மருத்துவ காரணங்களால் பயணத்தை தொடர்வது தகுந்த நடவடிக்கை அல்ல என விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில், வேறுவழியின்றி மேத்தா தமது மனைவியுடன் விமானத்தைவிட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அவரது மகளும் எஞ்சிய குடும்பமும் அதே விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.
இதனிடையே Air Transat நிர்வாகமும் கைவிட, பெரும் போராட்டத்திற்கு பிறகு தங்கள் பயண முகவரை தொடர்பு கொண்டு Air Canada விமானத்தில் இருக்கை பதிவு செய்துள்ளனர்.
மேலும் அன்றிரவு தங்குவதற்கான ஹொட்டல், உணவு என மொத்தம் 5,000 டொலர் செலவிடும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதாக மேத்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் சம்பவம் நடந்த பின்னர் இதுவரை Air Transat நிர்வாகத்திடம் இருந்து எந்த பதிலும் தமக்கு கிடைக்கவில்லை என மேத்தா குறிப்பிட்டுள்ளார்.