பறக்கும் விமானத்தில் கொரோனா தொற்றுடன் இறந்த பயணி: ஜேர்மன் விமான நிலையத்தில் பரபரப்பு
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணி ஒருவர் கொரோனா தொற்றுடன் பறக்கும் விமானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25ம் திகதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து ஜேர்மனியின் ஹாம்பர்க் நகருக்கு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றுள்ளார் குறித்த நபர்.
இந்த நிலையில் விமான ஊழியர்களே 51 வயதான அந்த நபரை தமது இருக்கையில் மரணமடைந்த நிலையில் மீட்டுள்ளனர். ரஷ்யாவில் பிறந்த குறித்த நபர் ஜேர்மனியில் Schleswig-Holstein மாநிலத்தில் வசித்து வருகிறார்.
துருக்கியில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 10 மணிக்கு விமான பயணம் மேற்கொண்ட அவர், பறக்கும் விமானத்திலேயே மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
விமானம் ஜேர்மன் நேரப்படி பகல் 1 மணிக்கு தரையிறங்கவே, பயணிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், குறித்த நபர் மட்டும் இருக்கையில் இருந்து வெளியேறாமல் போகவே, சந்தேகமடைந்த ஊழியர்கள் முன்னெடுத்த சோதனையில், அவர் மரணமடைந்துள்ளது தெரிய வந்தது.
அவர் மரணத்திற்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் நபர் என்றே கூறப்படுகிறது.
உடற்கூராய்வில் குறித்த நபர் ஜேர்மனிக்கு திரும்பும் பாதி வழியில் இறந்திருக்க கூடும் என்றே தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் இது தொடர்பில் விமான சேவை நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டதற்கான சான்றிதழ் சமர்ப்பித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த நபர் விமான பயணத்தினிடையே மரணமடைந்த தகவல் எஞ்சிய பயணிகளுக்கு தெரிந்திருக்குமா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை என்றே கூறப்படுகிறது.