திடீரென தங்கள் விமானத்திற்கு அருகில் போர் விமானம் வந்ததால் பதறிய பயணிகள்..கடும் சிக்கலில் பிரித்தானிய இளைஞர்
லண்டனிலிருந்து ஸ்பெயின் நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றிலிருந்த பயணிகள், திடீரென தங்கள் விமானத்தை போர் விமானம் ஒன்று நெருங்கியதால் பதற்றமடைந்தார்கள்.
நடந்தது என்னவென்றால், லண்டனிலிருந்து ஸ்பெயின் தீவான Menorca தீவிற்கு பயணிகள் விமானம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. அப்போது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. எனவே உடனடியாக போர் விமானம் ஒன்று அந்த பயணிகள் விமானத்துக்கு உதவுவதற்காக அதன் அருகே வந்துள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த போர் விமானம் பயணிகள் விமானத்தை நெருங்குவதையும், அது திடீரென தனது இறக்கைகளை அசைப்பதையும் காணலாம். அதாவது ஒரு போர் விமானம் அப்படி தன் இறக்கைகளை அசைத்தால், பயணிகள் விமானத்தின் விமானியிடம், ’என்னைப் பின் தொடர்ந்து வா’ என்று போர் விமானம் கூறுவதற்கான சமிக்ஞையாம் அது.
@easyJet #a319 G-EZAO intercepted by Spanish Air Force on way to Menorca. passengers not being allowed to leave yet. @BigJetTVLIVE @BBCNews @SkyNews @SkyNewsBreak pic.twitter.com/MTWkQnU39x
— Ian Leslie ❤️??❤️ (@iandrleslie) July 3, 2022
ஆக, போர் விமானத்தின் சமிக்ஞையைப் புரிந்துகொண்ட பயணிகள் விமானத்தின் விமானி, விமானத்தை விமான நிலையத்தில் இறக்க, அந்த விமானம் உடனடியாக மற்ற விமானங்கள் நிற்கும் இடத்திலிருந்து தூரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாக மோப்ப நாய்களுடன் வந்த பொலிசார் மக்களுடைய உடைமைகளை எல்லாம் கீழே இறக்க, வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு எதுவும் உள்ளதா என ஆராய்ந்துள்ளார்கள்.
பின்னர், விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்ததையடுத்து, இரண்டரை மணி நேர தாமதத்துக்குப் பின் லண்டன் புறப்பட்டுள்ளது அந்த விமானம். இதற்கிடையில், விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஒரு பிரித்தானிய இளைஞர் என தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் சட்டப்படி அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், போர் விமானத்தைக் கொண்டுவரும் ஒரு நிலையை உருவாக்கியதால், பயணிகள் விமானத்துக்கு 50,000 பவுண்டுகள் வரை இழப்பீடு கோர உள்ளாதாகவும், விமான நிறுவனம் அந்த தொகையை, அந்த பிரித்தானிய இளைஞருக்கு அபராதமாக விதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், ஸ்பெயின் நீதிமன்றம் ஒன்றின் முன் கொண்டு வரப்பட இருக்கும் அந்த பிரித்தானிய இளைஞருக்கு, உலக நாடுகள் எதற்கும் பறக்க முடியாத வகையில் தடை விதிக்கப்படலாம் என்றும், விமான நிறுவனமும் அவர் மீது வழக்குத் தொடரலாம் என்றும் கூறப்படுவதால் அந்த பிரித்தானிய இளைஞருக்கு கடுமையான சிக்கல் உருவாகியுள்ளது.